புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை 

Tuesday, September 19th, 2017
புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடலங்களைக் குறித்த மயானத்தில் எரிப்பதற்கும்  யாழ். மேல்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால்  யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  நேற்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10.30 மணிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாகப் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் மன்றுக்கு வருமாறு தெரிவித்து வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள 300 வரையான கிராம மக்கள் முன்னிலையில் குறித்த வழக்கு மீண்டும் பிற்பகல்-01 மணியளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்பையா புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தை அண்மித்த பகுதியில் நான்கு மயானங்கள் அமைந்திருப்பதாக நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவரது கருத்தைக் கவனத்தில் கொள்வதாக நீதவான் தெரிவித்தார்.
மயானம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சிற்குப் பொறுப்பான  முதலமைச்சர் உட்பட உள்ளுராட்சிக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்ந்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரச சட்டத்தரணிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
மயானத்தை அகற்றக் கோரி இதுவரை காலமும் அமைதியான முறையில் போராடிய மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதவான் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்ததுடன் மக்களின்  போராட்டத்தைக் கைவிடுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts: