புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தடுத்திருக்கலாம் – கல்வி அமைச்சர் தகவல்!

Thursday, April 8th, 2021

மாவனெல்ல புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவத்தை முறையாக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், ஏப்ரல் தாக்குதல் பேரழிவு ஏற்பட்டிருக்காது.

அதனால் இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ஜீ,எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு, தனக்குரிய சட்டவரையறைக்குள் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு என்பது நீதிமன்றம் அல்ல. அதற்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் இல்லை.

என்றாலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பரிந்துரைகளை ஆணைக்குழு செய்திருக்கின்றது.

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மாவனெல்லையில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்தால் ஏப்ரல் தாக்குதல் பேரழிவு இடம்பெற்றிருக்காது.

மாவனெல்லை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுவிக்க அரசியல்வாதிகளின் பணிப்புரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: