புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் – பல துறைகள் ஸ்தம்பிதம்!

Wednesday, February 8th, 2023

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பல துறைகளின் ஸ்தம்பித்துள்ளன.

சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொழிற்சங்க நடவடிக்கைகளால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (8) காலை 8 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதால் வைத்தியசாலைகளின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் முற்றாக முடங்கியுள்ளன.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லை.

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவமனைகளுக்கு வந்த மக்களும் சிரமப்பட்டனர்.

இதேவேளை, புதிய வரி முறைக்கு எதிராக மின்சாரம், நீர், துறைமுகம் மற்றும் எண்ணெய் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்கள் இன்று மூடப்பட்டுள்ளதாகவும், மின்சாரத் தடைகளை மீளப் பெறுவதற்கான சேவைகள் வழங்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக வரிக் கொள்கைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று காலை 07 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக துறைமுகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று காலை 10.30 முதல் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் சேவையை விட்டு விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளித்தது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்கள் சுகயீன விடுமுறை அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று தமது கற்பித்த செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை தடுக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஈடுபடுவதற்கு அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாக நீதிவான் திலின கமகே தமது தீர்ப்பில் அறிவித்தார்.

எவ்வாறாயினும், வன்முறையில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்ற...
வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கக வாய்ப்பு - ல...