புதிய தாழமுக்கம் – வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை – விரிவுரையாளர் எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023

வடக்கில் எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

அதே வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை தற்போது உறுதிப்படுத்த முடியாது என அவர் கூறுகிறார்.

நாட்டின் வானிலை தொடர்பில் இன்று பதிவொன்றை இட்டு இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

“வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அதில் மொன்சூன் சுற்றோட்டம் ( Monsoon Circulation), வங்காள விரிகுடா கடற்பிரதேச வெப்பநிலையும் அமுக்க வேறுபாடுகள் ( Sea surface temperature and Atmospheric pressure variations), எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation- ENSO), மேடன் யூலியன் அலைவு( Maden Julion Oscillation-MJO) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் ( Indian Ocean Dipole- IOD), றொஸ்பி அலைகள் ( Rossby waves), கடல் தரைக் காற்றுக்கள் ( Land and Sea Breezes), மேற்காவுகைச் செயற்பாடுகள்(Convectional Process) போன்றன பங்களிப்பு செய்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இன்று வரை (22.04.2023) 82 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியே எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுக்கு மழையைத் தருவதில் மேடன் யூலியன் அலைவு முக்கியமானது. நீண்ட காலத்தின் பின் மேடன் யூலியன் அலைவு இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு வந்துள்ளது. அத்துடன் றொஸ்பி அலைகளும் வருகை தந்துள்ளது.

இதன் காரணமாக நேற்றுமுதல்(22.04.2023) எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது மிதமான வரட்சி (Mild Drought) நிலைமையே காணப்படுகின்றது.

தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தன்னுடைய நீர் வழங்கல் பிரதேசங்களுக்கு போதுமான நீரை வழங்குவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

எனவே எங்களுக்கு போதுமான அளவுக்கு மழைவீழ்ச்சி அவசியம். போதுமான மழைவீழ்ச்சி கிடைக்காது விட்டால் நாம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்வோம்.

எனவே மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் போதுமான மழை கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

அத்தோடு இக்காலப்பகுதியில் கிடைக்கும் மழை இடி மின்னல் நிகழ்வுடன் கூடிய மழை என்பதால் அது தொடர்பாக அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: