புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 10th, 2021

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளது.

முன்பதாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதற்கமைய இரண்டாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார பரிந்துரைகள் அனைத்தும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்துவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகர பாடசாலைகளை நாளைய தினம் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலப்பகுதிக்கு பாடசாலைகளை மூடி மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினம் பாடசாலை வளாகத்தில் நுளப்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு விரிவு தெரிவித்துள்ளது.

இதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கருத்து தெரிவிக்கையில் இந்த வருட கடந்த காலங்களில் 247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: