புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால் புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாவும் புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் இராஜினாமாவால் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை இராஜினாமா செய்தது.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவியில் இருந்த நிலையில், ஏனைய அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிறிலங்காவில் தற்போது, வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்க விரும்புவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, மகிந்த ராஜபக்ச விரைவில் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சு பதவி ஏற்க அரசாங்கத்தின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வராத சூழ்நிலையில் பலரது கோரிக்கைக்கு அமைவாக மீண்டும் மகிந்த பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அரசாங்கத்தின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் பிரதமரே நிதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: