பிரதமராகின்றார் ரணில் விக்கிரமசிங்க – இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு!

Thursday, May 12th, 2022

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (12) மாலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என்றும் நாளையதினம் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் கூறப்படுகிறது.

முன்பதாக ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டுமுதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 5 தடவைகள் பிரதமராகவும், 1994 – 2001, 2004 – 2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது, 2021 ஜூன் 23 ஆம் திகதிமுதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவருகிறார்.

காமினி திசாநாயக்க 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர், 1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் ரணில் பதவியில் இருந்தார்.

2015 ஜனவரி 8 இல், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் மீண்டும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர்,  2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக பதிவயேற்றார்.

இதனிடையே, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்றையதினம் ஆறாவது தடவையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் இருபத்தி ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவர் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்களில் 11 பேர் நேற்று இரவு ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியைப் போக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் நாட்டுக்குத் தேவை என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: