பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையிலேவயே உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, July 19th, 2023

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விரிவான பிரேரணையை ஏற்கனவே முன்வைத்துள்ளதாக நேற்று வலியுறுத்தியுள்ளதுடன் அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தான் உண்மையாகவே விரும்புவதாகவும் தமக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் செயல்பாடுகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் திட்டங்களை அவர் விளக்கினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் வழங்கல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்ட திட்டங்கள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்தி முன்முயற்சிகளை ஜனாதிபதி எடுத்துரைத்தார். பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் விரிவான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிரேரணை மற்றும் கலந்துரையாடல்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தன. வடக்கு, கிழக்கு மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

அதேநேரம் அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாடாளுமன்றத்தின் முழு ஆதரவுடன் மட்டுமே தொடர முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர் ரணில் ராஜபக்ஷ அல்ல ரணில் விக்கிரமசிங்க என்று கிண்டல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: