பிணைமுறி மோசடி: தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

Friday, June 14th, 2019

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது .

அந்தவகையில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக பொதுச்சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 5/1 பிரிவின் கீழ் மேல் மாகாண நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த வழக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் மத்திய வங்கி துணை ஆளுநர் பி. சமரசிங்க, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கசுன் பாலிசேன உட்பட 10 பிரதிவாதிகளுக்கு எதிராகவே தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 7 ஆம் திகதி மேல் மாகாண நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்குத் தொடர்வதற்கு, பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது, 10,058 பில்லியன் ரூபாய் திறைசேரி முறிகளை மோசடியான முறையில் கையாண்டமை தொடர்பாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: