பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Sunday, August 8th, 2021

பால்மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படமாட்டாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலையை 200 ரூபாவினால் உயர்த்தினால் தற்பொழுது நாட்டில் நிலவும் பால் தட்டுப்பாடு நீங்கி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பால்மாவிற்கான விலைகளை உயர்த்த இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒட்டுமொத்த உலகிலும் விநியோக வலையமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் பால்மா நிறுவனங்கள் இறக்குமதி செய்யவில்லை எனவும் இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே சந்தையில் தற்போது பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள நிலையில் சந்தையில் போதுமான பால்மா இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே நாட்டில் மாதாந்தம் 6 ஆயிரத்த 500 மெற்றிக் டன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகின்றது.

எனினும் தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வெளிநாட்டு இருப்பு குறைவடைந்தமையினால் பால்மா இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன. எனினும் அரசாங்கத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஒன்றிணைந்த உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய –  கடந்த ஜனவரி மாதம்முதல் நுகர்வோர் அதிகார சபையிடம் பால்மா விலையை அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிறுவனங்களுக்கு மாதாந்தம் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என இது குறித்து கருத்துரைத்த கால்நடை வளங்கள் பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்..

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் சில பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

அந்த அடிப்படையில் பால்மா இறக்குமதியிலும் தட்டுப்பாடு நிலவக்கூடும். எனினும் போதுமான பால் கையிருப்பில் உள்ளதோடு அவற்றை மக்களுக்கு பகிர்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்   தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: