பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காவே இந்தியாவின் முதலீடுகள்! – துணைத் தூதுவர் ஆ. நடராஜன்

Tuesday, August 23rd, 2016

இந்திய முதலீட்டாளர்களினால் தெல்லிப்பழையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலை மூலமாக உடனடியாக 50 பெண்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது. அந்த தொழிற்சாலை மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு வேலை வாய்ப்பில்லாத பலருக்கும் வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நேற்று (22) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு வெளியிடுகையில் –

இந்திய அரசின் அனுசரணையில் பிரபல இந்திய இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜின் முயற்சியில் இந்திய தனியார் முதலீட்டு நிறுவனமொன்று அலுமினிய தொழிற்சாலை ஒன்றினை யாழ்.தெல்லிப்பழை அம்பனையில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இந்த தொழிற்சாலை மூலமே 50 பெண்களுக்கு உடனடி வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.

வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம். இங்கு வாழும் மக்கள் எமது உறவுகள். நமது இரத்தங்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழிவகைகளில் நாமும் உதவி புரிய வேண்டும். இதன் காரணமாகவே கடந்த வருடம் நூறு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வடமாகாணத்திற்கு விஜயம் செய்தனர். தாம் பயனடைய வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல. மாறாக வடமாகாணத்தில் முதலீடு செய்வதன் மூலம் இங்கு வாழும் உறவுகளின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும். இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது எனவும் இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் மேலம் தெரிவித்துள்ளார்.

Related posts: