பாடசாலை செல்லும் மூன்றிலொரு பகுதி மாணவர்கள் காலை உணவு எடுப்பதில்லை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Wednesday, November 8th, 2017

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களில் 14 லட்சம் பேர். அதாவது மூன்றிலொரு பகுதியினர் காலை உணவு உண்பது இல்லை என்று ஆய்வுகளிலிருந்து அறியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போசாக்குப் பிரிவு தெரிவித்துள்ளது.

கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம் மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே காலையில் உணவு உண்ணாமல் செல்லும் மாணவர்கள் தொடர்பில் விபரம் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போசாக்குப் பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ, காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். காலை உணவு எடுக்காத பிள்ளைகளிடம் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல், போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளைப் பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் என்றார்.

காலை உணவு எடுக்காமல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலே அதிகம் காணப்படுவதாகவும் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

பிள்ளைகளுக்கு காலையில் ஒரு கோப்பை பால் கொடுப்பதை பெற்றோர்கள் பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர். அது போதுமானதாக இல்லை. ஒரு கோப்பை பாலை விட பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பது முக்கியமானதாகும். பாடசாலை செல்லும் வயதில்தான் பிள்ளைகளிடம் துரித வளர்ச்சி காணப்படும். காலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என்று மூன்று உணவு பிரிவுகளை கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும். பால் என்பது இதில் ஒரு பிரிவு மட்டுமே. அதனை இடை உணவாகக் கொடுக்கலாம் என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போசாக்குப் பிரிவு சிறப்பு மருத்துவ ஆய்வு மையத்தின் போசாக்குப் பிரிவு டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related posts: