பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை – மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் – பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021

எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளரதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள நிர்வாகப் துறையினர் சேவைக்கு சமுகமளிப்பது கட்டாயம் இல்லை என்பதுடன் வேறு நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்கள் அவசியமான நேரத்தில் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை உரிய ஆவணங்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம்’ பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொற்றுடன் அதிக மாணவர்கள் அடையாளம் காணப்படும் பாடசாலைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் எடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோன தொற்றுடன் பாடசாலை மாணவர்கள் சிலர் அடையாளங்காணப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதுள்ளதாகவும் இது குறித்து தொற்று நோய் ஆய்வு பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாகவும் இதனூடாக கொத்தணிகள் உருவாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: