பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுங்கள் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!
Wednesday, February 24th, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், உத்தியோகத்தர்களும், பங்கேற்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் நிலவும் அபாயகரமான சூழலை கருத்திற்கொண்டு, ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 2 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


