பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கு ஏற்பாடு – 2023 ஓகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் என பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிட்டட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நேற்றையதினம்  நடைபெற்றது.

இதன்போது, பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர், ஜீவானந்த விஜேசுந்தர, முகாமைத்துவ பணிப்பாளர் திஸ்ஸ லயனகே, நிபுணத்துவ ஆலோசகர் ராஜரட்ணம் மற்றும் றஞ்சித் முதலிகே ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான தமது திட்ட முன்மொழிவை விளக்கிக் கூறினர்.

திரவ வடிவிலான கொஸ்டிக் சோடாவை பிரதான உற்பத்தியாகக் கொண்டியங்கவிருக்கின்ற இந்தத் தொழிற்சாலை மூலம், மேலதிக விளைபொருள்களாக குளோரின், ஐதரோகுளோரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைட் என்பனவும் உப உற்பத்திகளாக மேற்கொள்ளப்படும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவை இதர பல உற்பத்தி முயற்சிகளான, சோப், சுத்தீகரிப்பு திரவங்கள், துணி சுத்தீகரிப்பு மற்றும் நிறமூட்டல், உணவு பதனிடல் என பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியமான மூலப்பொருள்களாக அமையும் என்று குறிப்பிட்ட அவர்கள், இதன்மூலம் மேலும் பல கைத்தொழில்துறைகள் பயனடையும் என்றும் தெரிவித்தனர்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் உற்பத்திசெய்யத் திட்டமிடப்பட்டுள்ள இந்த இரசாயன மூலப்பொருள்களின் தேவை தற்போது இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுவதாகத் தெரிவித்த அவர்கள், இரசாயன தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீள ஆரம்பித்தால், இந்த மூலப்பொருள்களின் தேவையில் பெரும் பகுதி உள்ளூரிலேயே, குறைந்த செலவில் பூர்த்திசெய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.

இதனடிப்படையில் சுமார் 2600 மில்லியின் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைச் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2023 ஓகஸ்ட்முதல் இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் என்றும் கூறிய அவர்கள், இந்தத் தொழிற்சாலை உற்பத்திகள் மூலம் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் 200 ஏக்கர் அளவிலான பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணியில் ஒரு பகுதியிலேயே முதற்கட்டத் தொழிற்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், தொழிற்சாலைச் சுற்றுவட்டாரத்தில் இரசாயன உற்பத்திகளுடன் தொடர்புடைய புதிய கைத்தொழில் முயற்சிகளை தனியார்துறையினர் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பரந்தன் கெமிக்கல் கம்பனி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  இதன்மூலம் இந்தப் பகுதி ஒரு இரசாயன கைத்தொழில்பேட்டையாக வளர்ச்சியடையும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது இரசாயன தொழிற்சாலை என்பதால் சூழலுக்கு ஏற்படக்கூடிய மாசுக்கள் தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலளித்த கம்பனி பிரதிநிதிகள், தொழிற்சாலையின் செயற்பாட்டா்ல எழக்கூடிய ஒலி மாசு தொழிற்சாலை வட்டாரத்துக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்றும், இதர திண்ம, திரவ மற்றும் வாயு வடிவ கழிவுகள் மீள்சுழற்சிப்படுத்தல் மூலமோ அன்றி பாதுகாப்பான கழிவகற்றல் பொறிமுறை மூலமோ சுற்றாடல் பாதுகாப்புத்துறையினரின் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தினர்.

முன்பாதாக 1956ம் ஆண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை அதன் முழுச் செயற்பாடடுக் காலத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியிருந்தது.

1980களின் பிற்பகுதியில் ஆயுத மோதல்கள் காரணமாக செயலிழந்த அதன் தொழிற்பாடுகள் பின்னர் கொழும்புக்கு இடமாற்றப்பட்டது. தற்போது தொழிற்சாலை முற்றுமுழுதாக ஆயுத மோதல்களால் அழிவடைந்துள்ள நிலையில் அது மீளச் செயற்படுத்தும் முயற்சி கைத்தொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: