பயங்கரவாத பட்டியலிலிருந்து புலிகள் அமைப்பை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்பு!

Sunday, November 28th, 2021

சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிச் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் நீதிமன்றம் நிகராரித்துள்ளது.

டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர். இந்நிலையில் மேன்முறையீட்டு தரப்பினரின் சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளின் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் மீண்டும் சேர்த்தது.

இதனை நீக்குமாறு கோரி இந்த மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளுகளுக்கு முன்னர் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2019 ஆம் ஆண்டு கூறியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை கடந்த 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது. புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டை பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகிய நாடுகளும் ஆதரித்தன.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களின் அர்த்தப்படுத்தல்களுக்கு அமைய ஆயுத மோதல்கள் நடக்காமல் இருப்பது பயங்கரவாத தடைக்கான விலக்கில்லை எனக் கூறப்பட்டுள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதேவேளை புலிகள் அமைப்பு தமிழர்களின் உரிமைகளை மதிக்கும், சுயநிர்ணய உரிமைகளை அமைதியான முறையில் அனுபவிப்பதை மதிக்கும் பல்வேறு கூறுகளைக் கொண்ட சர்வதேச தேசிய வலையமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: