பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 11th, 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் சுமார் 40 பேர் மாத்திரமே தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறைச்சாலைகளில் 13 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது ஒரு பாரிய பிரச்சினையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்காக திறைசேரியில் இருந்து பாரியளவு நிதி வழங்கப்படுவதனால் பொதுமக்களுக்கு அவசியமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சிறைச்சாலைகளின் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாரிய குற்றவியல் குற்றங்கள் இன்றி, சிவில் குற்றங்களுக்கு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட முன்னர் அவர்கள் தொடர்பான விசாரணை நிறைவைடையும் வரை குற்றம் சாட்டப்படுபவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினரை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: