பயங்கரவாதத்தினை ஒழித்தோம் எனக் கூறும் அரசாங்கத்திற்கு  ஏன் போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி!

Thursday, June 28th, 2018

பயங்கரவாதத்தினை ஒழித்தோம் எனக் கூறும் அரசாங்கத்திற்கு  ஏன் போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் போதைப் பொருள் கடத்தலுக்கு அரசாங்கம் துணை போகின்றதாக என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற 6 வயது சிறுமியின் கொலைச் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது யாழ்ப்பாணம் பலாலி வீதி பரமேஸ்வராச்சந்தி மற்றும் இராமநாதன் வீதியை மறித்து இன்று  28 போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் மட்டுமன்றி தற்போது இடம்பெற்றுள்ள 6 வயது சிறுமிஉட்பட பலரின் கொலைச் சம்பவங்களைப் பார்த்தால் அவற்றின் பின்னணியில் போதைப்பொருட்கள் தான் காரணமாக உள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இராமநாதன் வீதி வழியாக பரமேஸ்வராச் சந்தியில் இரு வீதிகளையும் மறித்து போக்குவரத்தினை தடை செய்து போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

போராடடடத்தின் போது லஞ்சம் வாங்குவதில் உள்ள ஆர்வம் குற்றங்களைத் தடுப்பதில் இல்லை. காவல்துறையா கஞ்சா துறையா? வளரும் பயிரை முளையிலே கிள்ளாதே காவல்துறையே நித்திரையா? போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது  இந்தியாவில் இருந்து வரும் கேராள கஞ்சாவினை கடத்துவதற்கு பொலிஸாரும் துணை போகின்றார்களா என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பயங்கரவாத்தினை தடை செய்துவிட்டோம். ஆயுதக் கடத்தல்களை முறியடித்துவிட்டோம் எனக்கூறும் அரசாங்கம் ஏன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பின்நிற்கின்றது.

போதைப்பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன் இவ்வாறான கொலை மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினையும் முன்னெடுக்க வேண்டுமென்றும்இ யாழ்;.பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் என்றும் எதிர்காலங்களில் போதைப் பொருட்களை காரணம் காட்டி நடைபெறும் பாலியல் வன்புனர்வுக் குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிரான மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடுமென்றும் வடமாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.​

Related posts: