பனைசார் உற்பத்தி பொருள்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி துளசி வலியுறுத்து!

Sunday, February 28th, 2021

பனைசார் உற்பத்தி பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் முன்னெடுக்கும் தொழிலாளர்களது உற்பத்திகளை மேம்படுத்தி அதனை முன்னெடுக்கும் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி துளசி வலியுறுத்தியுள்ளார்.

சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் கடந்த வியாழனன்று நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் வாழும் மக்களது பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்நிலையிலேயே திருமதி துளசி குறித்த விடயத்தை சபையில் முன்மொழிவாக சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் பனைவளம் அதிகம் காணப்படுகின்றது. அதேபோன்று அதனை மூலதனமாக கொண்டு பல பெண்களினுடைய வாழ்வாதரம் காணப்படுகின்றது. இதை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களிற்கான வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கும் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள எமது சபை கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கான நிதிமூலங்களை பெற்றுக்கொடுக்கும் வழிவகைகளை நாம் கண்டுகொள்ளவேண்டும்.  அவ்வாறான செயற்பாட்டுடன் காணப்படும் நிறுவனங்களினதும் நிதிப்பங்களிப்புடன் இதை முன்னெடுக்க முடியும்.

அந்தவகையில் எமது வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இந்த கைத்தொழிலினை ஊக்குவிப்பதுடன் பெண்களிற்கான தொழில் வாய்ப்பும் அதன் மூலமான வருமானத்தினையும் ஈட்டிக்கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக காணப்படுவதால் இதை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என தெரிவித்தள்ள அவர் இந்த சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபை அங்கீகரிக்வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: