பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Thursday, December 17th, 2020

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது. எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அந்த காலத்தில் நாட்டில் சில புதிய சுகாதார நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது  எவ்வாறான  நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 “தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில், குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலையின் தாக்கம் ஆரம்பம் முதல்  சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடித்தமையால். முப்படையினர் மற்றும் பொலிஸார், சுகாதாரப் பிரிவினரால் வடபகுதியில்  இலகுவாக கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிடிந்தது.

அத்தோடு நேற்றைய தினம் கூட ஜனாதிபதி, யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். மாவட்ட செயலகம் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில்  கண்காணித்து வருகிறோம்.

வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இராணுவமானது நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாகவே செயற்பட்டு வருகின்றது.

தற்போது இங்கே ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார். அதற்கிணங்க எதிர்காலத்தில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: