பட்டம் சிக்குண்டதே நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதற்கு காரணம் – மின்சார சபையின் வடமாகாண முகாமையாளர் !

Wednesday, February 7th, 2018

சிறுவர்கள் வானில் ஏற்றி மகிழும் பட்டங்கள் மின்சார கம்பிகளில் சிக்குண்டதன் காரணமாகவே நேற்றையதினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது என இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண முகாமையாளர் ஞானகணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் முகாமையாளர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மற்றும் நீர்வேலி, சிறுப்பிட்டிப் பகுதிகளில் வெயில் காலத்தில் சிறுவர்கள் அதிகளவில் பட்டம் விட்டு மகிழ்வது வழமையாகும். ஏற்றும் பட்டமும் அதன் நூலும் மின்கம்பிகளில் சிக்குண்டதும் அதனைக் கைவிட்டுச் சென்றுவிடுவர். அது தொடர்பான தகவலை எவரும் மின்சார சபைக்கு வழங்குவது கிடையாது.

இவ்வாறு குடாநாட்டின் சிறுப்பிட்டிப் பகுதியில் ஓர் இடத்தில் பெரிய பட்டம் ஒன்று இரு கம்பிகள் இடையில் சிக்குண்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் பகல்வேளையில் இந்தப் பகுதியில் திடீரென மழைபெய்த காரணத்தால் பட்டம் மற்றும் நூல் என்பன ஈரமடைந்து இரு மின்கம்பிகளிடத்திலும் மின்சார தாக்கம் ஏற்பட்டு கம்பிகள் அறும் நிலமைவரை சென்றது. இதன் காரணமாக உடனடியாக எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி மின்சாரத்தை துண்டிக்கும் நிலமை ஏற்பட்டது.

மின்சார விநியோகத்தை சீர்செய்ய இரண்டு மணிநேரம் ஊழியர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணத்தால் ஏனைய இடங்களிலும் தேடுதல் மேற்கொண்ட சமயம் மேலும் பல இடங்களில் இவ்வாறு பட்டங்கள் சிக்கித் தொங்கும் நிலமை காணப்பட்டது.

இவ்வாறு காணப்படும் பட்டங்களும் அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் தமது குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளின் எப்பாகத்திலேனும் சிறுவர்கள் பட்டம் ஏற்றும்போது அவதானத்துடன் செயல்படுவதோடு மின் கம்பிகளில் பட்டம் சிக்கி இருப்பதனை அவதானித்தால் உடன் மின்சார சபைக்குத் தகவல் வழங்குமாறு கோருகின்றோம் என்றார்.

Related posts: