பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களில் ஒப்படைப்பு; தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு!

Wednesday, August 26th, 2020

அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களிடம் கையளிக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கான நியமனக் கடிதங்கள் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அவையும் நேற்றைய தினம் உரிய மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் உறுதிமொழிக்கு அமைய 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் திட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கான நியமனம் வழங்கப்படுகிறது.

அத்துடன் 3 மாத கால பயிற்சியின் பின்னர் அவர்கள் அனைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் கீழ் உள்ளீர்க்கப்படுவார்கள். பயிலுனர்களாக நியமிக்கப்படும் அனைவரும் நியமனம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தில் வரும் 2ஆம் திகதி புதன்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவேண்டும்.

பயிலுநர்கள் அனைவருக்கும் இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் தலைமைத்துவப் பயிற்சி, தொடர்பாடல் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படவேண்டும் என்று சகல மாவட்ட செயலர்களுக்கு அரச சேவைகள் அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த அறிவுறுத்தல் தொடர்பான கடிதம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சகல மாவட்ட செயலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இதேவேளை மீதமுள்ள 10 ஆயிரம் பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வடபகுதியில் குறித்த நியமனத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்ததுடன் அது தொடர்பில் இன்றையதினம் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: