படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படமாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Friday, October 28th, 2016
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவப் படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படாது என்றும் அவர் கூறினார். கடற்றொழில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழையும் படகுகளை கைப்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான பணிப்புரை வழங்கியிருப்பதாகவும், இதுவரை கைப்பற்றப்பட்ட படகுகள் எதுவும் மீள வழங்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.இலங்கைக்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் சுமார் 125 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுடைய படகுகளோ உபகரணங்களோ மீள வழங்கப்படாது. எதிர்வரும் 5ஆம் திகதி இந்தியா செல்லவிருப்பதாகவும், இவ்விஜயத்தின் போது மீனவர் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் தீர்க்கமுடியுயா என முயற்சிக்க விருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


