பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அமைப்பு!

Wednesday, February 3rd, 2021

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்திப்பை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறமை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், பங்காளதேஷ் பிரதமரின் வாழ்த்து செய்தியை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றையும் அவர் பிரதமரிடம் கையளித்திருந்தார்.

இதன்போது வேளாண்மை, மீன்பிடி மற்றும் கப்பல் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பு மூலம் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு குறித்து உயர் ஸ்தானிகர் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், பங்களாதேசம் நன்னீர் மீன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளதாகவும் அதன் சிறந்த நடைமுறைகளை இலங்கையுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய காலநிலைகளுக்கு ஏற்ற வகையிலான உயர்தர அரிசியை உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பங்களாதேசம் இதுவரை இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது.

கல்வி மற்றும் ஒளடத துறைகளுக்கு பங்காளதேஷ் இதுவரை அளித்த ஆதரவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இலங்கையில் ஒளடத உற்பத்தி துறையில் பங்காளதேஷ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உயர் ஸ்தானிகருக்கு அழைப்புவிடுத்தார்.

இதனிடையே பங்காளதேஷ் இந்த ஆண்டு ஐம்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அதனை முன்னிட்டு பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமருக்கு உயர் ஸ்தானிகர் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: