பகிடிவதை செய்தால் 5 வருடங்கள் சிறை!

Tuesday, May 10th, 2016

வன்முறைகளைத் தடுப்பதற்கான புதிய கொள்கை, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று, களனிப் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் ஆகியன இணைந்தே இந்தக் கொள்கையை தயாரித்துள்ளன. இந்தக் கொள்கை, களனிப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலில் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு மாணவர்கள் வெளியேறுவதனால் தான் இந்தக் கொள்கையை செயற்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டது. பேராசிரியர்களைத்தூற்றுவது, விரிவுரையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகியன காரணமாகவும் இக்கொள்கையை செயற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

சட்டத்தின் பிரகாரம், குற்றமிழைத்தவர்களுக்கு இரண்டு வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்கமுடியும். மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவது எங்களுடைய தேவையாக இல்லை. மாணவர்களை நல்லபாதையில் கொண்டுசெல்லவேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகும்.

பகிடிவதை உள்ளிட்ட முறைப்பாடுகளை நாங்கள் இனிமேல், விசாரணைக்கு உட்படுத்த மாட்டோம். அவ்வாறான சம்பவங்களைப் பொலிஸுக்கு அனுப்பிவைத்துவிடுவோம் என்றும் அவர் கூறினார்.

Related posts: