நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, February 4th, 2022

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே அன்றி, அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –  ‘நாட்டில் மத, ஊடக சுதந்திரம் இருக்கின்றது. கருத்து சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது.

அரசியல், பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும். நாட்டின் தலைவர் ஒருவர், பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு இலக்கை நோக்கி செயற்படுவது இலக்கல்ல.

சுதந்திரம் மிக்க சனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில் நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பதுபோன்று பொறுப்புக்களும் இருக்கின்றன.

சிலசமயம் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எமக்கு எதிராக செயற்படுகின்றன. மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நாட்டின் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சிறந்த நிலைப்பாடுகளால் நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

புதிய உலகத்துடன் நாம் போட்டியிட வேண்டுமானால் நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடினமான காலம் என்றென்றும் நீடிக்காது, கடினமான காலங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை.

அதனால் மற்றவர்களை மனதளவில் புண்படுத்தும் யாரும் சமுதாயத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை. நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நீண்ட கால பிரச்சனைகள் அல்ல.

ஒரு நாட்டை உரிய திசையைநோக்கிக் கொண்டுசெல்லும்போது அதற்காக நாட்டின் அனைவரினதும் உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்க முறையான சிந்தனையின்மூலம் மட்டும்தான் நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும்.

எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.

எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது  முதலீடுகள் முக்கிய காரணியொன்றாகும். முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு  எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், எமக்கு உள்நாட்டு முதலீடுகளைப்போல சர்வதேச முதலீடுகளும் அவசியமாகும்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென கூறப்பட்டது. ஆனால் நாங்கள் வென்றோம். நாங்கள் எமது சவால்களை வெல்ல திடசங்கற்பம் பூண வேண்டும். அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்யவேண்டும். நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது. கடந்த காலங்களில் சவால்கள் சமாளிக்கப்பட்டது போன்று அடுத்த வருடங்களிலும் நாம் சவால்களை வெல்வோம்.“ எனவும் தெரிவித்திருந்த ஜனாதிபதி எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும் நடொன்றாகும்.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர்  முயற்சிகளை மேற்கொண்டபோதும் எவ்விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு -   டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையால்...
கொரோனாவால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு தொற்று இருப்பதே தெரியாது - அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் த...
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...