நெடுந்தாரகை படகுச் சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன் வலியுறுத்து!

Monday, June 4th, 2018

நெடுந்தீவு பகுதி மக்களின் போக்குவரத்து தேவைக்காக சேவையிலீடுபடுத்தப்படும் குமுதினி படகு சேவை இலவசமாக மக்களுக்கு கிடைக்கின்றபோது ஏன் நெடுந்தாரகை படகுச் சேவைக்கு மக்களிடமிருந்து பணம் அறவிடப்படுகின்றது? குறித்த படகுச் சேவையையும் மக்களின் நலன்கருதி இலவசமாக வழங்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபையின் உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணத்திற்கும் நெடுந்தீவுக்குமான போக்குவரத்து சேவையை மக்களின் நலன்கருதி எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல தடைகளையும் தாண்டி சீரான முறையில் கடந்தகாலத்தில் முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக எமது தீவகப்பகுதி மக்கள் தமது போக்குவரத்து தேவைகளை இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுவந்தனர்.

ஆனால் தற்போது நெடுந்தீவு பகுதி மக்களின் போக்குவரத்தில் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் குமுதினி படகுக்கு பயணக்கட்டணம் அறவிடப்படாத போது நெடுந்தாரகை படகு சேவைக்கு ஏன்  பணம் அறவிடப்படுகின்றது? அதனை குறித்த தரப்பினர் ஆராய்ந்து மக்களின் நலன்கருதி இலவவசமாக சேவையிலீடுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் இப்பகுதியில் காணப்படும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டுவருவதால் போக்குவரத்து தேவைகளின் போது, மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வுகளும் காலக்கிரமத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த  குகேந்திரன் குறித்த பிரதேச மக்களது தேவைகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக எமது கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த பிரச்சினையை நாம் முன்நிறுத்தியிருந்தோம் என தெரிவித்தார்.

இதனிடையே வேலணை பிரதேச சபைக்குட்பட்ட மண்டைதீவு பிரதேசத்தில் காணி சுவீகரிப்பது தொடர்பான பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன் அது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: