நுண்நிதி கடன் பெற்றவர்களுக்கு விடுதலை – 700 பேருக்கு தள்ளுபடி!

Wednesday, February 13th, 2019

நுண்நிதிக் கடனைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வில் நுண் நிதிக் கடன் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் முன்வைத்துள்ள அறிக்கை விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் செயற்பாடு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு காலப் பகுதியில்  வடக்கில் அதிகளவில் நுண்நிதிக் கடன்கள் பெறப்பட்டன. பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் அவை அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டன.

நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் பலர் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழந்தனர். நுண்நிதிக் கடன்களை வசூலிக்கச் செல்வோர் வரம்பு மீறிச் செயற்பட்டதுடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் பாலியல் லஞ்சமும் கோரப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நுண்நிதிக் கடன்களை தள்ளுபடி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கைச் சேர்ந்த 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நுண்நிதிக் கடனைத் தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ், நாளை வியாழக்கிழமை இடம்பெறும் நிகழ்வில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

Related posts: