நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் – மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, September 11th, 2022

வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 9.56 பில்லியன் ரூபா கட்டணங்கள்,சாதாரண வீட்டுப்பாவனையாளர்களின் கட்டணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பது இன்றியமையாதது.

எனவே மின்சார நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என்று மின்சாரசபை கோரியுள்ளது.

தரவுகளின்படி, ஜூன் 30 ஆம் திகதிக்குள் தொழிற்சாலைகள் செலுத்தத் தவறிய கட்டணப் பெறுமதி 2.7 பில்லியன் ரூபாய்களாகும்.

அடுத்த அதிகபட்ச நிலுவைத் தொகையான 870 மில்லியன் ரூபாய்கள், இராணுவம், காவல்துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள், கல்வி, உள்ளுராட்சி சபைகள் மற்றும் இலங்கை தொடரூந்து திணைக்களம் ஆகியவற்றிலிருந்து செலுத்த வேண்டியுள்ளது.

697 மில்லியன் ரூபாய்களை விருந்தகங்களும் சுற்றுலா விருந்தகங்கள் 196 மில்லியன் ரூபாய்களையும் செலுத்தவேண்டியுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதிமுதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சார கட்டணத்தை குறித்த மத வழிபாட்டுத் தலங்களே செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் மின்சார சபை கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் மத நிறுவனங்களுக்கு 500 சதவீதத்திற்கும் அதிகமான கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சாதாரண பிரிவு நுகர்வோர் தங்கள் கட்டணத்தைச் செலுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: