குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, September 1st, 2020

குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் – உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக மஞ்சள் உள்ளிட்ட ஒரு சில நுகர்வு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

விலையை கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதால் எந்தவொரு காலத்திலும் எதிர்பார்த்த இலக்கை நோக்கி செல்ல முடியாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாது கிராமிய மக்களை விவசாயத்திற்காக ஊக்கப்படுத்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இறக்குமதிக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதன் கஷ்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அந்நியச் செலாவணி விகிதங்களை கட்டுப்படுத்துவதற்கும் உயர் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் கொவிட் நோய்த் தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறைந்த வருமானமுடையவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக்கொண்டு செயற்படுத்திய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

சமுர்த்தி பயனாளிகளின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்க வேண்டும். வீட்டுத் தோட்டம், முட்டைக்காக கோழிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் போசாக்கு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நகர, மத்திய தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்காக சதொச, கூட்டுறவுத்துறை, விவசாய சேவை மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விவசாய விளைச்சலை நேரடியாக நுகர்வோருக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் நாடு பூராவும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் வாழ்க்கை செலவு உபகுழு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: