நீதிமன்ற பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!
Tuesday, March 28th, 2017
நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்புக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அத்தகைய குறைப்பாடுகளை மறுசீரமைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.
பலபிட்டிய மேல் நீதிமன்றத்தின் ஆவணக் களஞ்சியத்தினுள் திருடர்கள் நுழைந்தமை தொடர்பில் வினவியபோதே, நீதியமைச்சின் செயலாளர் நியூஸ்பெஸ்டுக்கு இந்த விடயங்களைக் கூறினார்.
பலபிட்டிய மேல் நீதிமன்ற ஆவணக் களஞ்சியத்தினுள் திருடர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றங்களின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலபிட்டிய மேல் நீதிமன்ற ஆவணக் களஞ்சிய அறை திருடர்களால் உடைக்கப்பட்ட போதிலும் அங்கிருந்த ஆவணக் கோவைகள் எதுவும் காணாமற்போகவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற ஆவணக் களஞ்சிய அறைக்குப் பொறுப்பான அதிகாரி இதனை உறுதிசெய்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்த வழக்குக் கோவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள களஞ்சிய அறையின் ஜன்னல் ஊடாக திருடர்கள் உட்பிரவேசித்துள்ளதுடன், அங்கிருந்த வழக்குக் கோவைகள் மற்றும் இரும்பு அலுமாரிகளை கிளறியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
விரல் அடையாள உத்தியோகத்தர்கள், குற்றப்புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இதுதொடர்பனா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


