நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது – நீதி அமைச்சர் !

Monday, March 29th, 2021

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது நாட்டின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையிழப்பதற்கே வழிவகுக்கும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து இதை குறிப்பிட்டார். மேலும் கூறியதாவது,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்பும் அச்சமுமின்றி செயற்படும் அதேவேளை, அதன் சுயாதீனத்தன்மை தொடர்ந்து பேணப்படும் என்றும் நம்புகின்றேன்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் இறையாண்மை என்பன சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளன.

அதுமாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சி, நீதி நிர்வாகம், சுயாதீன நீதித்துறை, மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகிய விடயங்களிலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

எமது நாடு சர்வதேச தரம்வாய்ந்த சட்டத்தரணிகளை உருவாக்கியிருக்கிறது. எனினும் தற்போதும் விசாரணைகள் முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்படாமல் பெரும் எண்ணிக்கையான வழக்குகள் உள்ளன.

இந்த நிலைமை நாடு என்ற ரீதியில் நாம் முன்நோக்கிச் செல்வதற்கு பெரும் சவாலாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அவை மேலும் விரிவாக்கப்பட்டிருப்பதுடன் இரவுநேர நீதிமன்ற நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் எமது நாட்டில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது நாட்டின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையிழப்பதற்கே வழிவகுக்கும்.

ஆகவே எமது நீதிமன்ற நடவடிக்கைகளின் செயற்திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறை மறுசீரமைப்பிற்காக வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில் நாம் நெடுந்தூரம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. ஆகவே நீதிமன்ற செயற்பாடுகளை மேம்படுத்துகின்ற பொதுவான இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

000

Related posts: