நீடித்த பிரச்சினைக்கு சட்டத்தின் தாமதமும் ஒரு பிரதான காரணமாகும் – 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க வாய்ப்பை வழங்கியுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, December 2nd, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன.

இதன்படி ஏ.எச்.எம் திலிப் நவாஸ்•குமுதினி விக்ரமசிங்க•ஷிரான் குணரட்ன•ஜனக் டி சில்வா• அச்சல வெங்கபுலி•மஹிந்த அபேசிங்க ஆகியோர் உயர் நீதிமன்றம் நீதியரசர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேனகா விஜேசுந்தர•டி.என்.சமரகோன்•பிரசாந்த டி சில்வா•எம்.டி.எம்.லஃபார்•பிரதீப் கீர்த்திசிங்க •சம்பத் அபேகோன்•எம்.எஸ்.கே.எம். விஜயரத்ன•எஸ்.யு.பி கரலியந்த• ஆர்.குணசிங்க• ஜீ.ஏ.டி.கனேபொல•கே.கே.ஏ.வி.சுவர்ணாதிபதி•மாயதுன்ன கொராயா•பிரபாகரன் குமாரரத்னம்• டபிள்யு.என்.என்.பி.இந்தவல ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளன. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.

நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அந்த செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்;டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: