நீக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Monday, June 21st, 2021

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருந்தார்.

இது இன்றுமுதல் ஜூலை 5ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்ட்டுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும் என்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும் என்றும் பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், மதுபானக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும். சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும்.

ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும்.

மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது. இவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: