நியாயம் நிலைத்தோங்கும் சமூகத்தை கட்டியெழுப்பும் திருநாளாக தீபத்திரு நாள் அமையட்டும் – பிரதமர்

Saturday, October 29th, 2016

தீமை எனப்படும் இருளைத் தோற்கடித்து மனிதன் நல்வழியில் செல்வதன் முக்கியத்துவத்தினையும், ஒழுக்க விழுமியங்கள், நீதி, நியாயம் நிலைத்தோங்கும் சமூகமொன்றினைக் கட்டியெழுப்பப்படுவதன் தேவையினையும் தீபத்திரு நாள் மீண்டும் எமக்கு நினைவூட்டுகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்ள அனைவரும் தீபாவளித் திருநாளை ஓர் முன்மாதிரியாக்கொள்வோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது உலகம் முழுவதுமுள்ள இந்துக் கோயில்களிலும் மாளிகை, குடிசை என்ற வித்தியாசமின்றி இந்துக்களின் வீடுகளிலும் தெருக்களிலும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளின் ஒளிக்கீற்றுக்கள் பிரகாசிக்கும். இந்துக்கள் வருடாந்தம் வெகு விமரிசையாகக் கொண்டாடும் அந்த சிறப்புமிக்க பண்டிகையே தீபாவளிப் பண்டிகையாகும்.

இந்துக்களுக்கு கேடு விளைவித்த நரகாசுரனைத் தோற்கடித்தல், இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகை தருதல் போன்ற புராதனக் கதைகள் மற்றும் சமயக் கிரியைகளுடன் தொடர்புபட்டுள்ள தீபாவளித் திருநாளானது தன்னிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனப்படும் இருளைத் தோற்கடித்து மனிதன் நல்வழியில் செல்வதன் முக்கியத்துவத்தினையும், ஒழுக்க விழுமியங்கள், நீதி, நியாயம் நிலைத்தோங்கும் சமூகமொன்றினைக் கட்டியெழுப்பப்படுவதன் தேவையினையும் மீண்டும் எமக்கு நினைவூட்டுகின்றது.

உலகமானது பௌதீக ரீதியாக மிகச் சிறப்பான வகையில் அபிவிருத்தியடைந்தாலும் அன்பு, கருணை, பொறுமை, மன்னிப்பளித்தல், தாராள மனப்பான்மை போன்ற நற்பண்புகளை விட்டும் விலகி மனித குலத்தினை அழிவுப் பாதையில் இட்டுச்செல்வதற்கு வழியமைத்துக் கொண்டிருப்பதனை நாம் காண்கின்றோம். இனம், மதம், கட்சி, நிறம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை பிளவுபடுத்தும் கெட்ட சக்திகள் முழு சமூகத்தையும் இருளில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வது இலகுவான விடயமாகும். எனினும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஒரே மனதுடன் நன்மைக்காக செயற்படுவது என்பது பாரிய சவாலாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அனைத்து பேதங்களையும் நீக்கி மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கி சமானதாமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்காக தீபாவளித் திருநாளை ஓர் முன்மாதிரியான வழிமுறையாகவும், உறுதியான பங்காளியாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பதை நினைவுபடுத்தி, தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளப்பூர்வமாக வாழ்த்துக்களைத் தெரவித்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

d1bc0c524b496e1e0b04760bbec92a43_L

Related posts: