நியாயமான தீர்வு கிடைக்கும்; யாழ். பல்கலை மாணவர்கள் நம்பிக்கை!

Friday, November 4th, 2016

யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களின் படுகொலை தொடர்பில் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே. ரஜீவன் தெரிவித்தார். உரிய தீர்வு கிடைக்காவிடில் ஒரு மாதத்திற்குப் பின்னர் போராட்டம் ஏதோவொரு வகையில் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது மாணவர்களினால் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், மாணவர்கள் எடுத்துள்ள தீர்மானம் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை (02) முற்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்குச் சட்டவரையின்றி நஷ்டஈடு வழங்க முடியாது. இதுவரை காலமும் அவ்வாறான நஷ்டஈடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. நீதித்துறை தன்னுடைய கடமைகளைச் செய்யும்.

ஆனால், மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணைக்கான கால அளவைக் குறைக்க அழுத்தம் கொடுக்கப்படுமெனவும் இந்த விடயத்தில் நீதியானதும், நடுநிலையானதுமான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி எம்மிடம் உறுதிமொழி வழங்கியிருக்கிறார்.

ஜனாதிபதியைச் சந்தித்தமை தொடர்பில் விவாதங்களிருந்தாலும் எமது போராட்டத்தில் இறுதியாக நாங்கள் ஜனாதிபதியை எவ்வாறெனினும் சந்தித்தேயாக வேண்டும். அவரை முன்னரே சந்தித்துத் தீர்வுபெற்றுக் கொண்டால் இறுதியாக அவரிடம் செல்ல வேண்டிய அவசியமிருக்காது.

பலவீனமான சிறுபான்மை சமூகமாக இருந்து கொண்டு பெரியவளவிலான நடவடிக்கைகள் எதையும் மாணவர்களால் எடுக்க முடியாது. எமது வரலாற்றில் எத்தனையோ, வலிமையானவர்கள் போராட்டம் பேச்சுவார்த்தைகள் நடாத்திய போதும் தீர்வு எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாணவர்கள் கொல்லப்பட்டமை ஒரு முக்கிய பிரச்சினை. ஆகவே, ஜனாதிபதியிடம் எங்களுடைய பிரச்சினையைக் கொண்டு சென்றால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றோம்.

எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் எமது போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருக்கிறது. உரிய தீர்வு கிடைக்காவிடில் ஒரு மாதத்திற்குப் பின்னர் எமது போராட்டம் ஏதோ வொரு வகையில் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்

62col5.0.560.320.160.600.053.800.668

Related posts: