நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பானமையுடன் நிறைவேற்றுவதற்கு சில சரத்துகள் திருத்தப்பட வேண்டும் – உயர் நீதிமன்றம் தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அல்லது அதன் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்லவென உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ நாடாளுமன்றிற்கு இன்று அறிவித்தார்.

இந்தநிலையில், இணையவழி சட்டமூலத்தின் சில சரத்துகளை குழுநிலை விவாதத்தின் போது, திருத்தம் செய்து, அதனை சாதாரண பெரும்பாண்மையில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாமையினால், அதன் அரசியலமைப்பு தொடர்பான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 மனுக்களின் நடவடிக்கைகளையும் நிறைவுறுத்துவதாக உயர் நீதிமன்றம் நாடாளுமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளது.

இதனிடையே அரசியலமைப்புச் சட்டத்தின் 84(2) பிரிவுகமைய, ஷரத்துகள் 3, 5, 7, 9, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53, மற்றும் 56 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழு நிலையின் போது இந்த ஷரத்துகள் திருத்தப்படுமாயின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த சட்டமூலம் அல்லது அதன் விதிகள் அரசியலமைப்புக்கு முரணாக இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்பதாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலமானது நாட்டின் சில அறிக்கைகளில் தகவல் தொடர்புகளைத் தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது விமர்சனம் முன்வைக்கப்பட்டதுடன், சட்டமூலத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 46 மனுக்கள் தாக்கல் செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: