நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் – ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!

Monday, April 8th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலன் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும், சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நேற்றைய தினம் (07.04.2019) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐரோப்பிய, கனேடிய விஜயங்களை மேற்கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் தோழர் ஜெகன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைத்திருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கட்சியினதும், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் கொள்கை விளக்கங்களைத் தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட அதேவேளை, கட்சியின் பலம் பலவீனங்களையும் பிரஸ்தாபித்து, அவற்றுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு தோழர்கள் அனைவரும் தோளோடு தோள் சேர்த்துச் செயற்பட முன்வருமாறு அறைகூவல் விடுத்தார்.

இதன்பொழுது, தொலைபேசியின் ஊடாக உரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினை என்ற அடிப்படையில் தீர்வுகளை நோக்கிக் கட்சியின் பயணமானது அமைந்துள்ளதாகவும், இவ்விலக்கை நோக்கிய பயணமானது, நிச்சயம் வெல்லும் எனவும், பல தசாப்தங்களாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்மொழியப்பட்ட தீர்வை நோக்கி அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமது பார்வையைத் திருப்பியுள்ள அதேவேளை, தாமும் அதே கருத்தைத் தீர்வாக செயற்படுத்த முன்வந்திருப்பது, எமது கட்சிக்குக் கிடைத்த வெற்றியாக தான் கருதுவதாகவும், அண்மையில் இதன் கருத்தையே ஐ.நா சபையில் இந்தியாவும் வலியுறுத்தியதாகவும் நினைவுபடுத்தியிருந்தார்.

மேலும், கட்சியினதும், தனது அயராத உழைப்பும் தலைமைத்துவதும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வைப் பெற்றுத் தருமெனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் செயலாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த தோழர் திலக் அவர்கள், தோழர்களினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கமளித்ததுடன், கட்சி அனைத்துத் தடைகளையும் தாண்டி, உறுதியுடன் பயணிக்கும் என்பதையும் ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருந்தார்.

இக்கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸ்தர்களான தோழர் மாட்டின் ஜெயா, தோழர் விந்தன் மற்றும் ஏனைய கட்சியின் பிராந்திய முக்கியஸ்தர்களும், மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: