நாம் தோற்கவில்லை – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்!
Saturday, December 3rd, 2016
பேருந்து சாரதிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட அதீத அச்சமே நேற்றைய(02) பஸ் பணிப்பகிஷ்கரிப்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பேருந்துகள் சேவையில் ஈடுபடாமைக்குக் காரணம் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தான் பேருந்து சாரதிகளினதோ ஊழியர்களினதோ சங்கத்தின் தலைவர் அல்ல. இதனால், பேருந்து சாரதிகள் சேவைக்கு வராது போனால் பேருந்து சேவை தடைப்படும். இதுதான் உண்மை பேருந்து சாரதிகளை 25,000 ரூபா தண்டப்பணத்தைக் காட்டி அதீத அச்சத்தை சில சங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன.
நேற்றைய தினம் வட மாகாணத்தில் மாத்திரமே பணிப்பகிஷ்கரிப்புக்கு எதிராக தமது சங்கத்தின் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்றைய தனியார் பேருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில், இலங்கையிலுள்ள மிகப் பெரும் தனியார் பேருந்து சங்கமான கெமுனு விஜேரத்ன தலைமையிலான சங்கம் ஈடுபடுவதில்லையென அறிவித்திருந்தும், அச்சங்கம் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இது குறித்து அவரிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தினால் தண்டப் பணத்தை அதிகரிக்க முடியாது. நாட்டிலுள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டம் திருத்தப்பட்டாலேயே அது சாத்தியமாகும். இந்த சட்டத்தை மாற்றுவதற்கு சுமார் 2 வருடங்களாவது செல்லும். நாட்டில் தேவையற்ற அச்சமொன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தை மாற்றுவதற்கு சில சக்திகள் எடுக்கும் முயற்சியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


