நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை தீர்த்துவைப்பதற்கே – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பில் இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கல்ல, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அந்த மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்கேயாகும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
தற்போது எமது நாட்டின் அரச அதிகாரிகளின் மூலமே அனைத்தும் மேற்கொள்ளப்படு வருகின்றது. எல்லா விடயங்களுக்கும் அரச அதிகாரி ஒருவரிடம் செல்ல வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.
அதனால் அரச அதிகாரிகளை மக்களுக்கு சேவை செய்யும் மக்களின் பிரச்சினைகளை விளங்கி அவற்றை விரைவாக தீர்க்கின்றவர்களாக மாற்றுவதே எனது நோக்கமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
அதேநேரம் திணைக்களங்கள் பெரும்பாலும் தனித் தனியாகவே பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு புரிதல் இருக்க வேண்டும்.
குறிப்பாக விவசாயம் தொடர்பான ஒரு பிரச்சினையை தீர்த்து கொள்வதற்காக செல்லும்போது இது எங்களுக்குரியதல்ல, இது வன சீவராசிகள் திணைக்களத்திற்கு அல்லது வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்குரிய பிரச்சினை என கூறுகிறார்கள். இது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இதனை மக்களிடம் விட்டுவிட முடியாது. அரசாங்கமே தீர்க்க வேண்டும்.
இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்து பாரிய அபிவிருத்தி திட்டங்களை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து முன்னெடுத்திருந்தபோது பல்வேறு போலிக் குற்றச் சாட்டுக்களை முன்னெடுத்து அந்த அரசாங்கத்தை தோல்வி அடையச் செய்தனர்.
அதற்கு பின்னர் நடந்தவற்றை எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையவும் கொள்கை ரீதியாக பாரிய வீழ்ச்சிகளும் ஏற்பட்டன. எமது தேசிய பாதுகாப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்தது.
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காத காரணத்தினால்தான் மீண்டும் இத்தகையதொரு நிலை உருவானமை பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று சர்வதேசத்திற்கு சென்ற எமது நாட்டின் இறையான்மையை முழுமையாக அழிவுக்குள்ளாக்கினர். ஜெனீவா முன்மொழிவுக்கு இணை அனுசரணை வழங்கி எமது சுதந்திரத்தை இல்லாமல் செய்தனர் என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்யிருந்தார்.
அத்துடன் எமது கலாசாரம், சமயம், சமயத்தோடு பிணைந்த எமது மரபுரிமைகளையும் இல்லாதொழித்தனர். தேரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரஹர ஒன்றைக்கூட நடத்த முடியாத வகையில் விகாரைகளில் இருந்த யானைகளையும் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு செய்து கலாசாரத்தை அழிவுக்குள்ளாக்கினர்.
இவற்றை எல்லாம் நாம் தற்போது மாற்றியவமைத்துவருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தற்போது கிராமத்திற்கு சென்றால் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழில் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
அதே போன்று தொழிநுட்பத் துறையை பலப்படுத்த இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கல்வித் துறையை மேம்படுத்தி அடுத்த நூற்றாண்டுக்கு ஏற்ற இளைஞர் யுவதிகளை உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த மாற்றங்களை நாம் தற்போது செய்து வருகின்றோம். நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல அந்த அடிப்படை மாற்றங்களை நாம் செய்துள்ளோம். இவற்றை தான் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|