நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் – மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத்தம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 25th, 2020

நாட்டின் உள்ள நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு நாட்டின் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு சுமார் 200 நீதிபதிகள் என்ற ரீதியில் இருப்பதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நீதிமன்ற வளாகத்தை பார்வையிடச் சென்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, நடுத்தர வருமான நாடுகளில், குறிப்பாக மலேசியா போன்ற நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 70 தொடக்கம் 75 நீதிபதிகள் உள்ளனர்.

இதனால்தான் நாம் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கின்றோம். இது எமது முதற் கட்டமாகும். ஆனால் எப்படி செய்தாலும் இந்த நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 30 நீதிபதிகள் மட்டுமே என்று அமைகிறது.

இரண்டாவது கட்டமாக நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதி மன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு திட்டத்திற்கு செல்வோம். மேலும் சட்டங்கள் அதிகளவில் திருத்தப்பட்டுள்ளன. காலாவதியான சட்டங்களைத் திருத்தி புதிய சட்டங்களை கொண்டு வர நாம் முயற்சிக்கின்றோம்.

இதுவரையில் கடந்த மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத்ததை மேற்கொண்டோம். சுமார் 30 சட்டங்களை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

குற்றவியல் சட்ட திருத்தம், வணிக சட்ட திருத்தம் மற்றும் குடியியல் சட்ட சீர்திருத்தம் போன்றவற்றிற்காக 3 துணை குழுக்களை நியமித்துள்ளோம்.

நாம் ஒரு குறிக்கோளுடனான வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் அவற்றின் பிரதிபலன்கள் இரண்டு, மூன்று நாட்களுக்குள் கிடைப்பதில்லை. நாங்கள் ஒரு அரசாங்கம் என்ற வகையில் இதை ஒரு பெரிய சவாலாக ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். அத்துடன் நாம் இந்தப் பிரச்சினையை முறையாக தீர்ப்பதற்கும் இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: