நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 3 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடளாவிய ரீதியில் 5 மாவட்டங்களில் 798 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்று, கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அவர்கள் குறித்த பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்தில் சீரற்ற வானிலை காரணமாக 184 குடும்பங்களைச் சேர்ந்த 723 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 72 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 12 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 619 பேர் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு 314 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 509 பேர் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில இடங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழைபெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் - நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவ...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்பு!
நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவு...