நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு விசேட வேலைத்திட்டம் – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023

நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் விவசாய அமைச்சுக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வலுவான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்தார்.

கால்நடைத் துறையில், நாட்டின் பால் மற்றும் புரதத் தேவைகளை முதன்மையாகப் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கமாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டில், நம்மால் 712 மில்லியன் லீட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. மீதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அரசாங்கம் 58 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக எமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

சுங்கத் தீர்வைகள் வழங்கப்பட்டு, கால்நடைத் தீவனம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் இறக்குமதிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என நம்புகிறோம்.

விவசாய அமைச்சு தற்போது புல்லை பயிராக பயிரிடும் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. அதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில், பங்கெடுக்கின்ற ஒரு விவசாயிக்கும் தலா 20,000 ரூபாய் என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

தற்போதும் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனைக்கான உந்துதல் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதுபோன்ற பால் சார்ந்த உற்பத்திகள் ஆரம்பிக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கும் இலாபம் கிட்டும்.

இதனால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுகின்ற அதேநேரம், நாட்டின் புரோட்டின் தேவையையும் நிவர்த்திக்கூடிய பாரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் விவசாய துறையின் வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களையும் தொடர்ச்சியான முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள அதேநேரம் உள்நாட்டு தேவைப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நிலையில் இந்நாட்டின் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தித் துறைகள் பெரும் சிக்கலுக்கும் முகம்கொடுத்துள்ளன. நாட்டின் அன்றாட முட்டை தேவை நிவர்த்திக்க அரசாங்கத்தினால் முடியாதிருந்த நிலையில், தற்போது அந்த நிலையில் மாற்றத்தை காண முடிந்துள்ளது.

அன்றாட முட்டை தேவையை பூர்த்தி செய்ய 80 ஆயிரம் முட்டைகள் தேவை. அந்த தேவையை உள்நாட்டில் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அரசாங்கத்திற்கு முட்டை இறக்குமதி செய்ய நேரிட்டது.

நாம் தற்போது 2 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்கிறோம். எனவே, எதிர்காலத்தில் கால்நடை உணவிற்கும் தட்டுப்பாடு ஏற்படாது.

அத்துடன், எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கான சோளத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராம மட்டத்தில் இத்திட்டத்தினை முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் கோழி இறைச்சி ஏற்றுமதி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் அரேபிய நாடுகளில் இலங்கை இறைச்சிக்கு விசேட கேள்வி காணப்படுகின்றது.

அதற்கான தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதனூடாக வெளிநாட்டு வருவாயினை ஈட்டிக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை –...
வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...