நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022

நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ளத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மஹா சங்கத்தினரை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹா நாயக்கர்களினால் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் ஓமல்பே சோபித தேரரினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் இதன்போது மஹா சங்கத்தினர் தங்களது கருத்துக்களை தொவித்தனர்.

இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் அது தொடர்பில் மஹா நாயக்க தேரர்கள் தலைமையிலான மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களதும் ஒப்புதலை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மஹாசங்கத்தினரிடம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்றும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பிரதமர் மகிந்த ராஜபக்ச எக்காரணத்தை கொண்டும் பதவி விலகமாட்டார், அதற்கான அவசியமும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பெரும்பான்மை பலம் எம்மிடமே உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கொள்ள தயார். பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவசியமற்ற தர்க்கத்தை சுயாதீன குழுவினர் முன்வைத்து வருகின்றனர்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களாணைக்கு புறம்பாக செயற்பட முடியாது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றில் 113 பெரும்பான்மையை காட்டிலும் பெரும்பான்மை பலம் நிலையாக உள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய தேவையும் கிடையாது, அதற்கான அவசியமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts:

சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்...
புதிய அமைச்சர்கள் சம்பளத்தை கைவிடுவதாகவும், ஏனைய சலுகைகளுக்கு வரம்பு விதிக்கப்படும் பிரதமர் ரணில் வி...
தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் ...