பொலிஸ் மா அதிபரை கடுமையாகச் சாடிய ஜனாதிபதி!

Wednesday, October 3rd, 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷஅமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் பொருத்தமற்ற செயற்பாடுகளினால் மக்கள் பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.  இந்த நிலைமையை துரித கதியில் சரி செய்து கொள்ள வேண்டுமெனவும், பொலிஸார் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழப்பானது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் குற்றச் செயல்கள், கொள்ளைகள், ஊழல் மோசடிகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்தா என்பதனை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உருவாகியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை அந்த குற்றச் செயல்களை ஊக்குவிப்பதற்கு நிகரானதாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்த போது அமைச்சர்கள் எவரும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: