நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Thursday, October 20th, 2022

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவொன்று பங்குபற்றியது.

அதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 03 பிரதான நாடுகளுடன், பொதுவான ஒரு இடத்தில் கூடி, சலுகை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த சந்திப்பில், பொதுவான மேடை ஒன்றின் அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இந்தியாவும், சீனாவும் இது தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக அறிவித்துள்ளன.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2019 நவம்பர் மாதமளவில் நாட்டில் வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டதால் அரசின் வருவாய் 8.5 சதவீதமாக குறைவடைந்தது.

ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டதால் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது. அந்த ஆண்டு சுமார் 600, 700 பில்லியன் ரூபாவை இழக்க நேரிட்டது.

முதலில் வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். வருமானம் குறைந்ததால்தான் பணம் அச்சிடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் 2 ஆயிரத்து 300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மேலும் உணவுப் பணவீக்கம் அதனை விடவும் அதிகரித்துள்ளது. இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று வருமானத்தை ஈட்டவும் வேண்டும். எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறவிட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. ஏற்றுமதி பொருளாதாரம் உள்ள நாடுகளில் வரி செலுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

தற்போது நமது நேரடி வரி வருமானம் 20 சதவீதமாகும். 80 சதவீதம் மறைமுக வரி வருமானமாகப் பெறப்படுகிறது. எனினும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடி வரி மூலம் பெறப்படும் வருமானம் 20 சதவீதத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இன்றேல் எமது இலக்கு வெற்றியளிக்காது என்றும், நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரி செலுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: