நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, October 3rd, 2023

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்றுமுதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 25,863 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தனது இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுர மாவட்டத்தி;ல் 248 குடும்பங்களைச் சேர்ந்த 925 பேர் பதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கேகாலை மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 1915 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்தில் 4480 குடும்பங்களைச் சேர்ந்த 18856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 804 குடும்பங்களைச் சேர்ந்த 3247 பேரும், காலி மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், புத்தளத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த, 757 பேரும், குருநாகலில், 23 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ் மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியாக மொத்தமாக 6250 குடும்பங்களைச் சேர்ந்த, 25863 பேர் மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: