நாட்டின் சீரற்ற காலநிலை:  9 ஆயிரத்து 815 குடும்பங்கள் பாதிப்பு – 8 பேர் பலி!

Tuesday, May 22nd, 2018

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் அதிக பாதிப்பகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக இதுவரை 8 பேர் பலியாகினர்.

இடிமின்னல் தாக்கம், மண்மேடு சரிவு, நீரில் மூழ்கி மற்றும் மர முறிவு காரணமாகவே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் 9 ஆயிரத்து 815 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 40 பேர் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடும் மழையுடன் வீசிய காற்றின் காரணமாக, 19 வீடுகள் முழுமையாகவும், 918 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் தயாராகவுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் கடற்படைக்கு சொந்தமான படகுகள் களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக சில சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட நேரிட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல, மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related posts: