நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை – கருத்துச் சுதந்திரமும் தாராளமாக உள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021

நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது கூட அரசாங்கத்தால் எந்தப் படையும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் இராணுவமயமாக்க மற்றும் பொதுமக்களை அச்சுறுத்த முயற்சிக்கவில்லை என இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்க் கொண்டு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகிப்பதனை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் அவசரகால விதிமுறைகள் தொடர்பான இரு விடயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மிகப் பழமையான உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்று என்றும் அது ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை மதித்து ஏற்றுக்கொள்கிறது. எனவே பிரஜைகளின் நலன் கருதி அரசாங்கம் தனது சர்வதேச கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்  இலங்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாக பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் மிச்செல் பச்லெட்க்கு முழுமையான பதிலை வழங்கும் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்கள் இராணுவ மயமாக்கப்படல், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ், இன்றையதினம் உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

.000

Related posts: