நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது போக்குவரத்து சேவைகள் – வழமையான நேரங்களுக்கு அமைய நாளைமுதல் புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு!

Sunday, October 31st, 2021

நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

முன்பதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான தீர்மானம் கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் செயற்பாட்டில், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய செகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் 50 சதவீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த காலம் போன்று தனியார் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னர் போன்று வழமையான நேரங்களுக்கு அமைய நாளை முதலாம் திகதிமுதல் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாளைமுதல் அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: